Wednesday, October 6, 2010

தினசரி 400 ஏழைகளுக்கு 3 வேளை உணவளிக்கும் நாராயணன்

சென்னை: ஏழைகள் பசியால் அவதிப்படுவதை பார்த்து வருத்தமடைந்த மதுரை
யைச் சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன் என்ற மனிதர், தினமும் 400 பேருக்கு 3
வேளை உணவளித்து வருகிறார்.

இதனால், உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வரும் சிறந்த மனிதர்களுக்கான விருது
போட்டிக்கு இவரை தேர்ந்தெடுத்துள்ளது அமெரிக்காவின் சிஎன்என்
தொலைக்காட்சி.

பசியில் வாடும் அனைவருக்கும் உணவளிப்பதே இறைப்பணி என்று வாழ்ந்தார் வள்ளலார்.
அதேபோல நாராயணனும் ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டு வருகிறார். இந்த
காலத்திலும் வீதியில் அனாதையாய் இருக்கும் ஏழைகளுக்கு உணவளிப்பததையே வாழ்வின்
லட்சியமாக கொண்டு ஒருவர் வாழ்கிறார் என்றால் கேட்பதற்கே ஆச்சரியமாக உள்ளது
அல்லவா?.

இந்த மனிதர் மதுரையை சேர்ந்த நாராயணன் கிருஷ்ணன். நட்சத்திர ஹோட்டலில் நல்ல
சம்பளத்தில் செஃப் ஆக வேலை பார்த்து வந்தவர் நாராயணன். ஆனால் சமுதாயத்தால்
கைவிடப்பட்டு வீதியில் ஆனாதையாய் திரியும் ஏழைகளைப் பார்த்து அதிர்ந்து பெரும்
பணத்தைத் தரும் அந்த வேலையை விட்டு விட்டு தினமும் தானே உணவு தயார் செய்து
அவர்களது பசியை போக்கி வருகிறார். தினமும் 400 பேருக்கும் மேல் 3 வேளை உணவு
அளித்து வருகிறார்

சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நல்ல சம்பளத்திற்கு செஃப்
வேலைக்கான வாய்ப்பு நாராயணனுக்கு வந்தது 2002ம் ஆண்டில். இதற்கான நேர்முகத்
தேர்வுக்காக சுவிஸ் சென்றார். பின்னர் அதை முடித்துக் கொண்டு வெற்றிகரமாக மதுரை
திரும்பினார்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் அவர் கண்ட காட்சி அவரது இதயத்தை ஒரு விநாடி
நிறுத்திப் போட்டது. சிக்குப் பிடித்த தலை முடியுடன், உடலில் ஒட்டிக் கிடந்த
துணியுடன், நகரக் கூட முடியாத நிலையில், சாப்பிட வழியில்லாமல் தனது மலத்தையே
சாப்பிட்டுக் கொண்டிருந்தார் ஒரு பாவப்பட்ட முதியவர்.

இந்தக் காட்சி அவரை அப்படியே புரட்டிப் போட்டு விட்டது. இதுகுறித்து அவர்
கூறுகையில், அந்தக் காட்சியைப் பார்த்து நான் பெரும் அதிர்ச்சி அடைந்தேன். எனது
சொந்த சகோதரர் ஒருவர் இப்படிப்பட்ட அவலமான நிலையில் இருக்கும்போது வெளிநாட்டு
வேலை எனக்குத் தேவையில்லை என்ற முடிவுக்கு நான் வந்தேன். இந்தியாவிலேயே தங்க
முடிவு செய்தேன்.

முதல் வேலையாக அந்த முதியவருக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன். அவருக்கு நல்ல
உடை கொடுத்து, தலைமுடியை வெட்டி சரிப்படுத்தினேன். அன்று தொடங்கியது எனது இந்த
பணி.

பின்னர் இதை பெரிய அளவில் செய்ய வேண்டும் என்பதற்காக 2003ம் ஆண்டு அட்சயா
டிரஸ்ட்டைத் தொடங்கினேன். அட்சயப் பாத்திரத்தை ஏந்திய மணிமேகலையின் நினைவாக
இந்தப் பெயரை வைத்தேன். அந்த அட்சயப் பாத்திரத்தில் அள்ள அள்ள குறையாமல்
வந்ததுபோலு எனது திட்டமும் நிற்காமல் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற
நம்பிக்கையில்தான் இந்தப் பெயரை வைத்தேன் என்றார் நாராயணன்.

நாராயணனும், அவரது அறக்கட்டளைக் குழுவினரும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து
விடுகின்றனர். தனது கையால் சமைத்த உணவுப் பொருட்களை பொட்டலமாக போட்டு எடுத்துக்
கொண்டு கிட்டத்தட்ட 170 கி.மீ அளவுக்கு சுற்றி வந்து ஏழை, எளிய மக்களை சாப்பிட
வைக்கின்றனர்.

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 400 பேர் வரை நாராயணனால் சாப்பிடும் வாய்ப்பைப்
பெறுகின்றனராம்.

இத்துடன் நிற்கவில்லை இவர்களது வேலை. சாப்பாடு கொடுக்கிறார். அதை சாப்பிடக்
கூட முடியாத நிலையில் (மன வளம் குன்றியவர்கள்) இருந்தால், பக்கத்திலேயே
உட்கார்ந்து அவர்களுக்கு சாப்பாட்டை ஊட்டி விடுகின்றனர். குடிக்க தண்ணீரும்
கொடுத்து அவர்கள் சாப்பிட்டு முடித்த பின்னர்தான் இடத்தை விட்டு நகர்கின்றனர்.

அத்தோடு நிற்காமல் அழுக்குப் படிந்த தலைமுடி, காடாக வளர்ந்து கிடக்கும்
தாடியுடன் யாராவது இருந்தால் அவர்களை தனது காரில் ஏற்றி தனது இருப்பிடத்திற்கு
அழைத்து வருகிறார். அவர்களுக்கு தானே உட்கார்ந்து அழகாக முடி வெட்டி, தாடியை
ஒட்ட வழித்தெடுத்து, முகத்தை சீராக்குகிறார் நாராயணன்.

பிறகு தான் பெற்ற குழந்தைக்குச் செய்வது போல ஒரு ஸ்டூலைப் போட்டு அவர்களை
உட்கார வைத்து சோப்பு போட்டு குளிக்க வைத்து அழகுபடுத்தி நல்ல உடையைக் கொடுத்து
உடுத்திக் கொள்ள வைக்கிறார். அப்போது தங்களையே புதிதாக பார்த்த மகிழ்ச்சியில்
அவர்களது முகத்தில் தெரியும் வெட்கச் சிரிப்பைப் பார்த்து நாராயணன் அடையும்
பூரிப்பு-அதை வார்த்தையால் சொல்ல முடியாது.

இதுவரை கிட்டத்தட்ட 10.2 லட்சம் சாப்பாடுப் பொட்டலங்களை இலவசமாக
விநியோகித்துள்ளாராம் நாராயணன்.

நாராயணன் குழுவினர் அணுகும் ஏழைகளில் பெரும்பாலானோர் மன நலம்
பாதிக்கப்பட்டவர்கள்தான். தனக்காக சாப்பாடு தரும் நாராயணனுக்கு நன்றி சொல்லக்
கூடத் தெரியாத அளவுக்கு மனதால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்கள்.

இது தனக்கு பெரும் மன நிறைவு தருவதாக கூறுகிறார் நாராயணன். நான் சமைப்பதை விட
அதை சாப்பிடும்போது அவர்கள் முகத்தில் தெரியும் நிம்மதிதான் எனக்கு பெரும் மன
நிறைவைத் தருகிறது. அவர்களின் ஆன்மா திருப்தி அடைவதை அவர்களின் முகத்தில்
பார்க்கிறேன். எனது மக்களை பட்டினியிலிருந்து காக்க விரும்புகிறேன் என்றார்
கண்களில் நீர் துளிர்க்க.

உலகளவில் நல்ல மாற்றத்தினை கொண்டு வருபவர்களில் 10 பேரை தேர்ந்தெடுத்து மக்கள்
வாக்களிப்பின் மூலம் அவர்களில் ஒருவரை ஒவ்வொரு ஆண்டும் ஹீரோவாக
தேர்ந்தெடுத்து விருது அளித்து வருகிறது சிஎன்என் தொலைக்காட்சி. இந்த வருடம்
சிஎன்என் தேர்ந்தெடுத்த பத்து பேரில் நாராயணன் கிருஷ்ணனும் ஒருவர்.

இவருக்கு விருது கிடைத்தால் விருதுக்கு தான் பெருமையாக இருக்கும். ஆனால் இந்த
விருதின் மூலம் அவர் பணி மேலும் வளர்ந்து விரிவடைந்து பெரிய ஆலமரமாக
வாய்ப்புள்ளது. நீங்களும் அவருக்கு ஆதரவாக வாக்க அளிக்க இங்கு சென்று
வாக்களிக்கலாம்.
நாராயணன் கிருஷ்ணனின் அட்சயா டிரஸ்ட்டின் இணையதளம். நாராயணனின் சேவையில்
பங்கெடுக்க விரும்புவோர் இதை அணுகலாம்...

No comments:

Post a Comment